இஸ்லாமாபாத்: வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

வட பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் 26,401 அடி உயரத்தில் 'பிராட் பீக்' மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் நிலவும். இதன் காரணமாக, பனிச்சரிவும் ஏற்படுகிறது. இந்த நிலையில், நேற்று நேபாள பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று, 'பிராட் பீக்' மலைச்சிகரத்தில் மலையேறத் தொடங்கினர். இந்தநிலையில், அங்கு நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிம்ஸ் டாய் தலைமையிலான இந்த மலையேற்றக் குழுவில் ஐந்து நேபாள மலையேற்ற வீரர்கள், ஹன்சாவைச் சேர்ந்த பாகிஸ்தான் மலையேற்ற வீரர் சோஹைல் சகி, ஓமன் நாட்டைச் சேர்ந்த நதிரா, அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கெய்ஸ், சீன மலையேற்ற வீரர் வாங் மற்றும் மற்றொரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் அடங்குவர். உடனடி தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் பாகிஸ்தான் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.