சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.

“கடந்த 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். இந்தத் திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்.

சென்னை பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய உள்ள விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தேன். மக்களிடம் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.