மதுரை:
தமிழக நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரையிலான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்காமல் நீண்டகாலம் விடுப்பில் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குறிப்பாக மழைக்காலங்களில் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை கண்காணித்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நீர்வளத்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், குறிப்பாக 15 நாட்களுக்குள் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டிய நடைமுறை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சில அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவைத் தொடர்ந்து புதிய இடத்தில் பொறுப்பேற்காமல் விடுப்பில் செல்வதாகவும், சிலர் பல மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலும் பணிக்கு வராமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பொறுப்பேற்காமல் இருப்பதன் மூலம், ஒரு சில இடங்களில் முக்கிய பொறியியல் பணிகளுக்கான பொறுப்பில் அதிகாரிகள் இல்லாத நிலை உருவாகிறது. இதனால் கீழ்நிலை ஊழியர்களே பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பருவமழை காலங்களில் அணைகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறப்பது, கால்வாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் சேதங்களை உடனடியாக சரிசெய்வது, குளங்கள் மற்றும் நீர்வழித்தடங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு மிகவும் அவசியமானதாகும்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இல்லாதபோது அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதுடன், பல்வேறு விஷயங்களில் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக கீழ்நிலை அலுவலர்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு, கால்வாய் சேதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியாத சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
மேலும், பணிக்கு வராமல் நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி ஊதியம் தொடர்ந்து வழங்கப்படுகிறதா, நீண்டகால விடுப்புக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்படுகிறது, பணியிட மாற்ற உத்தரவுக்குப் பிறகும் பொறுப்பேற்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
நீர்வளத்துறை என்பது மழைக்காலங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தேவைப்படும் முக்கியமான துறையாக உள்ள நிலையில், முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பணியில் இல்லாத நிலை தொடர்ந்தால் அதன் தாக்கம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களையே பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நீர்வளத்துறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்காத அதிகாரிகள் குறித்தும், நீண்டகால விடுப்பில் இருப்பவர்கள் குறித்தும் உயர் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகள் கட்டாயம் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
“அதிகாரிகள் இல்லாத நீர்வளத்துறை... மழைக்காலத்தில் அவசர முடிவுகளை எடுப்பது யார்?” என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.