சென்னை: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று (07.07.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பதிவுத்துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன இதன் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 17, 2026 முதல் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கான ஆவணப் பதிவுகள் "வருகை இல்லா ஆவணப்பதிவு" முறையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் கட்டாயமாக்கியுள்ளார்.புதிய நடைமுறை எவ்வாறு செயல்படும்?

பிரத்யேக உள்நுழைவு: கட்டுமான நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணையதளத்தில் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை உருவாக்கி ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

ஆவணப் பதிவேற்றம்: ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உறுதிப்படுத்தல்: புகைப்படம் மற்றும் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழியாக ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.

கட்டணம் மற்றும் தாக்கல்: அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணையவழியில் கட்டணம் செலுத்தி ஆவணத்தைத் தாக்கல் செய்யலாம்.

விரைவான சேவை: சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் மின்னணு கையொப்பத்துடன் கூடிய ஆவணம் இணையவழியில் அனுப்பப்படும்.

தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் பயன்கள்: இப்பதிவிற்கு முறையான இணைய இணைப்பு, ஆதார் அங்கீகரிக்கப்பட்ட கைரேகை இயந்திரம் மற்றும் வெப்கேம் அவசியமாகும். இந்த வசதி மூலம் பொதுமக்கள் 24 x 7 x 365 என எந்நேரமும், எங்கிருந்து வேண்டுமானாலும் ஆவணங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பதிவு அலுவலகங்களில் கூட்டம் குறைவதோடு, பதிவுப் பணிகள் விரைவாகவும் தடையின்றியும் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.