பாட்னா: பங்கிபூர் வெற்றி பாஜவுக்கும், அதன் தலைமைக்கும் மக்கள் தந்த எச்சரிக்கை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பங்கிபூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜவிடம் இருந்து தொகுதியை கைப்பற்றியதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர். இந் நிலையில், பங்கிபூர் வெற்றி பாஜவுக்கும், அதன் தலைமைக்கும் பீஹார் மக்கள் தந்த எச்சரிக்கை செய்தி என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி; பீஹார் முதல்வராக ஒரு சிறந்த நபரை நியமியுங்கள். ஆட்சிக்கு வரும்போது நீங்கள் (பாஜவை குறிப்பிடுகிறார்) அளித்த வாக்குறுதிகளில் கவனம் செலுத்துங்கள். பீஹார் மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யுங்கள். மக்கள் இடம்பெயர்ந்து செல்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். கடந்த காலங்களில் பங்கிபூர் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. நவம்பர் தேர்தலின் போது, 51,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆதரவளித்து இருந்த நிலையில் பங்கிபூரில் என்ன மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது, ஒன்றும் நடக்கவில்லை.

அப்படி இருந்தும் அக்கட்சியை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்றால் என்ன மாறி இருக்கிறது? மாற்றம் என்னவென்றால் பீஹாரில் பாஜ ஒரு புதிய தலைமையை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த தலைமை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. காரணம், அந்த நபரின் நடத்தை, குணம் மற்றும் ஆளுமை ஆகிய பீஹார் மக்களுக்கு பிடித்ததாக இல்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.