திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். இவ்வாறு திருப்பதி கோயிலில் சாமி தரிசனத்திற்காக செல்பவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. சில சமயங்களில் 24 மணி நேரத்தை கடந்தும் கூட காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருவதை நம்மால் காண முடிகிறது.
திருப்பதிக்கு வருகை தர கூடிய பக்தர்களுக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் அட்வான்ஸ் புக்கிங்கில் 500 டிக்கெட்டுகள், நேரடியாக கோயிலில் உள்ள கவுண்ட்டர்களில் 300 டிக்கெட்டுகள் நாள் தோறும் தரிசனத்துக்காக வழங்கப்படுகின்றன. இது தவிர திருப்பதி விமான நிலையத்தில் உள்ள தேவாலய நிர்வாக கவுண்ட்டர்களில் 200 டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் கோயில் வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு முந்தைய நாள் மாலையில் இருந்து காலை 6 மணிக்கு கவுண்ட்டர் திறக்கும் வரை பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வாறு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமங்களை எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஒரு பிரத்தியேக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இன்று 9-ம் தேதியிலிருந்து ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது . அதாவது பக்தர்கள் இனி நேரடியாக வந்து கவுண்ட்டர்களில் இந்த டிக்கெட்டுகளை பெற முடியாது, ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இன்று 9-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 9-ம் தேதி வரை என ஒரு மாத காலத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தி பார்க்க இருக்கிறது.
இது வெற்றி பெறும் பட்சத்தில் முழுவதுமாகவே ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கே மாற்றி விடலாம் என முடிவு செய்திருக்கிறதாம். எனவே இனி ஒவ்வொரு நாளும் காலை 9 மணி அளவில் அன்றைய நாளுக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் . பிற்பகல் 2 மணி வரை இந்த டிக்கெட் முன்பதிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.