சென்னை: நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை மற்றும் அவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து எதிர்கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
நேபாளத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பின்னர் இது குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார் .