நேபாளம்: நேபாளத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் சிக்கியுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் திடீரென்று ராட்சத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் பெருமளவில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. தற்போது இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள் அரசுக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, தஞ்சையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தமிழகத்தில் இருந்து 59 பேரை 13 நாள் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 30 தமிழர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை. 3 பேருந்துகளில் சென்ற நிலையில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.