உத்தமபாளையம், செப்.18: உத்தமபாளையம் கோகிலாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றி, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உத்தமபாளையம்–கோகிலாபுரம்–ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாலையோரம் தூய்மையாகி, வாகன ஓட்டிகளுக்கு பார்வைத்தெளிவு ஏற்படுவதுடன், சாலைப் பாதுகாப்பும் மேம்படும் நிலை உருவாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுத்தும் வகையில் பணிகளை முறையாக திட்டமிட்டு கண்காணித்து வரும் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நேரடியாக களப்பணிகளை கண்காணித்து, தேவையான இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களால் வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
நீதிமன்ற உத்தரவுகளை வெறும் ஆவணமாக வைத்திருக்காமல், அவற்றை களத்தில் செயல்படுத்தி வரும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை தொடர வேண்டும் என்றும், அனைத்து நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இதேபோன்ற தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.