நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றமற்றவர் என கூறி விடுவித்ததுடன் வழக்கையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

மத்தியில், கடந்த 2005ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் வசம் சுரங்கத்துறை இருந்தது. அப்போது ஒடிஷாவில் உள்ள தலபிரா - 2 சுரங்கத்தை, 'ஹிண்டால்கோ' நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப் பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., மன்மோகன் சிங் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தது. எனினும் 2015-ம் ஆண்டு மார்ச் 11ல், சுரங்க ஒதுக்கீடு வழக்கில் மன்மோகன் சிங் உட்பட ஆறு பேரை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து மன்மோகன் சிங் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் மன்மோகன் ஆஜராக தடை விதித்து, 2015 ஏப்ரல் 1ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடை நீடிக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜெய்மால்யா பாக்சி மற்றும் வி.மோஹனா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண் டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் ரத்து செய்யப்படுகிறது. சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கை ஏற்கப்பட்டது. மேலும், மன்மோகனுக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.