குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாளை 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக கவர்னர் சென்னை, காமராஜர் சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 7,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதிகளில் டிரோன் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது. சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.