மதுரை, செப். 17-
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாத, த.வெ.க., ஆட்சி ஓராண்டு கூட நீடிக்காது, என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுக்கூட்டம் மகபூப்பாளையத்தில் நடந்தது. பகுதி செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.
முன்னதாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, செல்லுார் ராஜூ பேசியதாவது: த.வெ.க., அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாக தெரியவில்லை. மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அரசு உரிய தீர்வு காணவில்லை.
ஜோதிடரை நம்பி முதல்வர் விஜய் செயல்படுகிறார். எத்தனை அண்ணாதுரை, ஈ.வெ.ரா., வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசு பேசும் நிலை உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை என கூறும் அரசு, புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கு பெரும் தொகையை செலவிடுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் பாஸ்கள் வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல், வெளிநாட்டு பயணங்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிப்பது ஏன். இந்த த.வெ.க., ஆட்சி ஓராண்டு கூட நீடிக்காது என்றார்.
இலக்கிய அணி துணைச்செயலாளர் காவேரி, தலைமை கழக பேச்சாளர்கள் லோகநாயகி, இளவரசன், கவுன்சிலர் கருப்பசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.