சென்னை: ஆக.,3ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்; ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் ஆக.,3ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை மீறிப் பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்; சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதல்வர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார். ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதல்வர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா?
முதல்வரின் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. மாநிலத்தின் முக்கியப் பிரச்னையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்வர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.