சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், இன்று (ஆகஸ்ட் 20) கோவளத்தில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் விஜய், “ போதைப் பொருளை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். கீழ்நிலை நீர் பிடிப்பு மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகள், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நதிநீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளின் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள் சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சினையை அணுக வேண்டும்.
பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தொகுதி மறுவறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை. தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என மத்திய அரசு சட்டபூர்வ உத்தரவாதம் தர வேண்டும். கர்நாடகாவின் பொம்மச்சந்திராவிலிருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.