தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மதியம் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்கூட்டியே தமிழகம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.