தீபாவளித் திருநாளைத் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தையும் தாண்டி, மக்களின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, தீபாவளி நாளான இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்படக்கூடிய பட்டாசு விபத்துகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான தயார் நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பயனாளர்கள் உடனிருந்தனர்.