தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவருடைய அமைச்சரவையில் 3-வது இடத்தில் இருந்தவர், வைத்திலிங்கம். 7 மத்திய மாவட்டங்களின் அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்த வைத்திலிங்கம், டெல்டா மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்த பல கட்ட அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவே வைத்திலிங்கம் தொடர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது, வைத்திலிங்கம் வெளியேறி தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். தி.மு.க.வில் இணைய நான் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று வைத்திலிங்கம் கூறினாலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரை சந்தித்து பேசிய போது, ஒரே கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதாவது, தன்னுடைய மகன் பிரபுவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்தால், தி.மு.க.வில் இணைவதாக அவர் உறுதியளித்ததாக தெரிகிறது. அதன் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திரும்பிய செந்தில்பாலாஜி, அவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகே மகன் பிரபுவுடன் சென்று தி.மு.க.வில் வைத்திலிங்கம் ஐக்கியமாகி இருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தனக்காக ஓட்டு கேட்டு சென்ற வைத்திலிங்கம், வரும் தேர்தலில் மகன் பிரபுவுக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு செல்ல தயாராகி வருகிறார்.