தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்று கனிமொழி எம்.பி. நேற்று தெரிவித்தார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது. திருநெல்வேலியில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது குறித்துப் பேசிய கனிமொழி, தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு மனுக்களைத் தருகிறார்கள். அடுத்தது அமையப்போவது தி.மு.க. ஆட்சிதான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்தார்.
புதிய கட்சிகள் கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக புதிய கட்சிகள் வந்து இணைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அது குறித்து எங்களின் தலைவர், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார் என்று கூறினார்.
சமீபத்திய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பது குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும், தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.