திருப்பதி, செப். 16-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் உள்ள இந்த கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா, இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு பூர்வாங்க பூஜையான அங்குரார்பணம் திருப்பதி மலையில் நடைபெற்றது.

அப்போது, ஏழுமலையானின் படைத்தளபதியான சேனை முதல்வன் கோயிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர், மாட வீதிகள் வழியாக கோயில் பின்புறத்தில் உள்ள வசந்த மண்டபத்தை அடைந்தார்.

அங்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் புற்று மண்ணை சேகரித்து அதற்கு பூஜைகள் நடத்தினர். சேகரிக்கப்பட்ட புற்றுமண் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, நவதானியங்களை புற்று மண்ணில் முளைப்பாரியிட்டனர். முளைப்பாரி இடப்பட்ட விதைகள் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு நாடு செழிப்படையும் என்பது ஐதீகத்துடன் கூடிய நம்பிக்கை ஆகும்.