திருச்சி, செப்.5-

திமுக மறுசீரமைப்பில் திருச்சி மாவட்டத்தில் அன்பில் மகேஷை விடவும் கே.என்.நேருவின் கைகளே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர் ரேஸில் கே.என்.நேரு இல்லையென்றாலும், அவரின் மகன் அருண் நேருவுக்கு 3 தொகுதிகள் கொண்ட திருச்சி மத்திய மாவட்டத்திற்கும், 2 தொகுதிகளை கொண்ட திருச்சி மாவட்டத்திற்கு அன்பில் மகேஷ் நியமிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு அடுத்தக் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பின், ஸ்டாலின் உடனடியாக 110 மாவட்டங்களாக பிரித்து அறிவித்தார். தற்போது மறுசீரமைப்பு குழு ஒன்றை உருவாக்கி மாவட்ட வாரியாக கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அடுத்த 15 நாட்களில் அதன் அறிக்கை ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

வயது வரம்பு மற்றும் 3 முறை மாவட்டச் செயலாளர் என்ற விதிகள் காரணமாக சீனியர்கள் பலரும் ஓரங்கட்டப்பட உள்ளனர். வயது வரம்பு 13 முன்னாள் அமைச்சர்கள் பதவி பறிபோகும் சூழலில், 3 மாவட்டச் செயலாளராக இருந்த அடிப்படையில் இன்னும் 3 சீனியர்களின் பதவியும் பறிபோகிறது. அதேபோல் மாநகரச் செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் திமுகவில் புதிதாக 50 மாவட்டச் செயலாளர்கள் உருவாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 தொகுதிகள் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. லால்குடி, மணச்சநல்லூர் தொகுதிகள் திருச்சி கிழக்கு மாவட்டமாகவும், ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் திருச்சி மத்திய மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முசிறி, துறையூர் தொகுதிகள் திருச்சி வடக்கு மாவட்டமாகவும், மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் திருச்சி தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதி அமைந்துள்ள திருச்சி மத்திய மாவட்டத்திற்கு அவரின் மகன் அருண் நேரு மாவட்டச் செயலாளர் ரேஸில் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஆனால் மறுசீரமைப்புக்கு முன்பாக அன்பில் மகேஷ் கட்டுப்பாட்டில் திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளும் இருந்தன. அது 2ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட அரசியலில் மீண்டும் கே.என்.நேருவின் கைகளே ஓங்கி இருப்பதாக திமுகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.