கரூர், செப்.5-

திமுகவில் மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையானது, ஆளுங்கட்சியின் கோட்டைகளையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் இந்த ஸ்மார்ட் மூவ், கட்சியில் கோலோச்சிய பல சீனியர்களின் அதிகார பீடங்களை ஆட்டம் காண செய்துள்ளதாம்.. என்ன நடக்கிறது திமுக வட்டாரத்தில்?

இந்த மறுசீரமைப்புக்கு, ஏற்கனவே திமுக மறுசீரமைப்பு குழு அளித்திருந்த அறிக்கையே அடிப்படையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, 1, 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி என்பதால் சோளிங்கர் மட்டும் தனி கட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு

ள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகையும் திண்டுக்கல்

இந்த மாற்றத்தில் திண்டுக்கல் முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இருந்த மாவட்ட அமைப்பில், ஐ.பி.செந்தில்குமார் கட்டுப்பாட்டில் 4 மாவட்டங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் கட்டுப்பாட்டில் 3 தொகுதிகள் இருந்தன. தற்போது அந்த 7 தொகுதிகளும் 3 புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், இரு தரப்பினரின் அரசியல் கணக்குகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய அமைப்பின்படி, பழனி-ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர், திண்டுக்கல்-நத்தம், நிலக்கோட்டை-ஆத்தூர் என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், இதுவரை தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் குறைந்துவிட்டதாக நினைக்கும் நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன..

திமுக மறுசீரமைப்புக் குழு

திண்டுக்கல் மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்களது கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகளை இழந்த மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்கள் சோஷியல மீடியாவில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.. இதனால், இந்த மறுசீரமைப்பு நிர்வாக மாற்றமாக மட்டுமல்லாமல், கட்சிக்குள் பல வருட காலம் இருந்த உள்ளூர் அதிகார சமநிலையையும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அதிகாரப்பூர்வ மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் லிஸ்ட் வந்தால்தான், இப்போதுள்ள அதிருப்தி மேலும் அதிகரிக்குமா என்பது தெரியவரும். முக்கியமாக, , புதிய மாவட்டங்களில் யாருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது பல சீனியர்களின் அடுத்த அரசியல் நகர்வையும் தீர்மானிக்கக்கூடும் என்கிறார்கள்.

கரூர் செந்தில் பாலாஜி

அதேபோல இந்த மாவட்ட மறுசீரமைப்பில், செந்தில் பாலாஜியின் விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. கரூரை மையமாக வைத்து அரசியல் செய்து வந்த செந்தில் பாலாஜி, இப்போது கோவை தெற்கு தொகுதியிலும் எம்எல்ஏவாக உள்ளார். இதனால், அவருக்கு அடுத்ததாக எந்த மாவட்ட பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்தது.

கரூரில் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகள் தற்போது கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், செந்தில் பாலாஜி கரூர் மாவட்டச் செயலாளராக தொடர்வாரா அல்லது கோவை பகுதியில் பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2 பகுதிகளிலும் தனது அரசியல் செல்வாக்கை தொடர்ந்து வைத்திருக்க அவர் விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜிக்கு தலைமை தரப்பில் ஒரு ஆப்ஷன் தரப்பட்டதாம்.. அதாவது, “உங்களுக்கு கரூர், கோவை இரண்டில் எது வேண்டும்” என்று கேட்கப்பட்டதாம்..

புலம்பல்கள், சலசலப்புகள்

இதைத்தான் சிலர் பொருமித் தள்ளுகிறார்கள்.. பொதுவாக, எந்தப் பகுதியில் ஒருவருக்கு வாக்குரிமை இருக்கிறதோ, அந்த பகுதியில்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது திமுகவில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும்.. ஆனால்,செந்தில் பாலாஜிக்கு மட்டும் இப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது? என்று முணுமுணுக்கிறார்களாம்.

ஒருபக்கம் மாவட்டங்களை பிரித்து, பல சீனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மாற்றியமைத்துள்ள திமுக தலைமை, மறுபக்கம் செந்தில் பாலாஜி போன்ற முக்கிய நிர்வாகிகளை தக்கவைத்து தேர்தல் பணியை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்

ஆனால் இந்த மாற்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பை தெளிவாக பிரித்து, உள்ளூர் அளவில் கட்சி பணியை வேகப்படுத்த முடியும் என்றும் திமுக தலைமை மிகவும் நம்புகிறது..

அதுமட்டுமல்ல, சிறிய அளவிலான மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால், மாவட்ட செயலாளர்கள் நேரடியாக தொகுதிகளை கவனிக்க முடியும்... இதன் மூலம் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி அமைப்பு, கூட்டணி பணிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பது எளிதாகலாம்... அதே நேரத்தில், நீண்ட காலமாக ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவும் இது வழிவகுக்கும் என்பதுதான் திமுக தலைமையின் திட்டமாகம்.

அனைத்துக்கும் மேலாக, “கட்சியின் தேர்தல் பணிக்காக எடுக்கப்படும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம்.. மாவட்ட மறுசீரமைப்பால் ஆங்காங்கே சில அதிருப்திகள் எழுந்தாலும், அதன் பின்னணியில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கமே இருப்பதாக கூறப்படுகிறது.

சிறிய மாவட்டங்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாக கண்காணிக்கவும், தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி அளவிலான செயல்பாடுகளை வேகப்படுத்தவும் முடியும் என்பதே தலைமை தரப்பின் கணக்கு என்கிறார்கள்.. அந்த வகையில், தற்போது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றங்கள், தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சாதகமான அமைப்பு ரீதியான பலனை கொடுக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி.. பொறுத்திருந்து பார்ப்போம்..