வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், சிஜேபி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது. இதற்கு பதில் அளித்த சிஜேபி பிரதிநிதி சவுரவ் தாஸ், பேச்சவார்த்தையை பொது இடத்தில் நடத்த வேண்டும். ஒன்று, ஜந்தர் மந்தரில் நடத்தலாம். இல்லாவிட்டால், கான்ஸ்டியூஷன் கிளப்பில் நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பேச்சுவார்த்தையை கான்ஸ்டியூஷன் கிளப்பில் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சிஜேபி சார்பில், சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா, அபிஜீத் தீப்கே, தீபக் பால்யன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் ரங்கா, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது ஆகிய மூன்று கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். இதில், கடைசி இரண்டு கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை குறித்து பதிலளிக்க நாளை (ஜூலை 25) மதியம் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது. தர்மேந்திர பிரதானை நீக்குவதில் ஏற்படும் தாமதம், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும். அரசு விரைவில் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.