"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பது தமிழர்களின் பாரம்பரிய வேளாண் அறிவை எடுத்துரைக்கும் பழமொழியாகும். ஆடி மாதத்தில் விதைகளைத் தயார் செய்து, சரியான பருவத்தில் விதைப்பதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெறலாம் என்ற முன்னோர்களின் அனுபவத்தை வலியுறுத்தும் இந்தப் பழமொழிக்கு ஏற்ப, மதுரை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதைத் தொகுப்புகளை வழங்கியது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு சிறப்பு காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

வீட்டுத் தோட்டங்களை அதிகரித்து, குடும்பங்களின் சத்தான உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்தத் தொகுப்பில் கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை உள்ளிட்ட 10 வகையான காய்கறி விதைகள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டுத் தோட்டங்களை அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)சாந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ராணி, மற்றும் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா, பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மகளிர் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோர்களின் வேளாண் அறிவை நடைமுறையில் கொண்டு வரும் வகையில், ஆடிப்பட்ட விதைத் தொகுப்பு வழங்கும் இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.