புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) வலுவான போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முயன்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டனர். பேரணிக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீஸார், தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தினர்; கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த மோதலில், இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு, ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்தில் அவரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.