புதுச்சேரி: “ தமிழகத்தில் ஊழலை குறைக்க முதல்வர் விஜய் பல முயற்சி எடுக்கிறார்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”இலாகா இல்லாத பதவி காலத்தை முடித்த ஜான்குமாரை போல் தற்போதுள்ள 5 அமைச்சர்களின் காலமும் முடிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. ரங்கசாமியின் செயல்பாட்டால் புதுச்சேரிக்கு ஏன் அமைச்சரவை என கேள்வி எழுகிறது. வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை என்டிஏ கூட்டணியும், முதல்வரும் செய்கின்றனர்.

நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. கோப்புகளை வைத்து அதிகாரிகள் தூங்குகிறார்கள். முதல்வரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை. பாஜக ஏன் தூங்குகிறது என்று தெரியவில்லை. புதுச்சேரியில் வாய் மூடி மவுனமாக இருக்க காரணம் என்ன? இதற்கு பாஜக தலைவர்களும், பொறுப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டும்.

என்.ஆர். காங்கிரஸ் அடிமைகளின் கட்சி. முதல்வரை தவிர யாரும் பேச மாட்டார்கள். பாஜக தனது நிலைப்பாட்டை இதுவரை சொல்லவில்லை. புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முதல்வர் தான் இலாகா ஒதுக்குவதில் முடிவு செய்ய வேண்டும் என தட்டிக் கழிக்கிறார். கூட்டணி ஆட்சியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜகவுக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என தமிழக முதல்வர் விஜய் போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்ல தயாரா? தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது. ஊழலை குறைக்க முதல்வர் விஜய் பல முயற்சி எடுக்கிறார்” என்றார்.