புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை கடந்த 6ம் தேதி, தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில், தேஜ்பாலுக்கான தண்டனையை அதிகரிக்கக் கோரி கோவா அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும். சரணடைந்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது விதி. மாறாக, மேல்முறையீட்டு மனுவுடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரும் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யலாம். இதில் எதையும் தருண் தேஜ்பால் தரப்பு மேற்கொள்ளவில்லை” என வாதிட்டார்.
தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார். மேலும், தேஜ்பாலுக்கு நிவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.