கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) தனது சேவைப் பரப்பை விரிவுபடுத்தும் வகையில் ஒரே நாளில் 16 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலாக்க அதிகாரி திரு. ரமேஷ் பாபு அவர்கள், ஹைதராபாத் கச்சிபௌலியில் புதிய கிளையைத் திறந்து வைத்தார்; எஞ்சிய கிளைகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 919 ஆக உயர்ந்துள்ளது.
வங்கியின் சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தகம், தொழில் மற்றும் கிராமப்புற மையங்களை மையமாகக் கொண்டு 6 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை: சென்னை (திருமங்கலம்), ஈரோடு (சித்தோடு), சிவகங்கை, காஞ்சிபுரம் (செவிலிமேடு) மற்றும் சேலம் (அம்மாபேட்டை, ஜாகீர் அம்மாபாளையம்) ஆகும்.
இந்த விரிவாக்கம் குறித்து பேசிய திரு. ரமேஷ் பாபு, "தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கம், உள்ளூர் வாடிக்கையாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் (MSME) மற்றும் விவசாயப் பிரிவினருக்கு ஏற்ற பிரத்யேக நிதித் தீர்வுகளை வழங்க பெரிதும் உதவும்" என்று குறிப்பிட்டார்.
சமீபத்திய நிதிச் செயல்பாடுகளில் கேவிபி வங்கி வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூன் 30, 2026 நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகம் ₹2,27,267 கோடியை எட்டியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY27) வங்கி இதுவரை இல்லாத அளவாக ₹756 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. 1916-இல் தொடங்கப்பட்ட கேவிபி, 2,169 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 'KVB DLite' மொபைல் செயலி மூலம் தனது சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.