சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26ம் தேதி மிதமான மழையும், வரும் 27 முதல் 30ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.