சென்னை: தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு, கடந்த மாதம் 30ம் தேதி கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த தவறியதால், தமிழக அரசு மற்றும் தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது. 'காவிரியில் விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுங்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என பரிந்துரை செய்தது.

அதன்படி, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.