புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரின் போது, ஜூலை 21 அன்று, பார்லி.,யை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர். இதில், திரளான மாணவர்களும் பங்கேற்ற நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, பின் வன்முறையாக மாறியது. பதற்றத்தை தணிக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெல்லட் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், மாணவர்கள் தரப்பில் சிலர் காயமடைந்தனர். அதே போல், போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், போலீசார் தரப்பிலும் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய அத்துமீறல்கள், தாக்குதல் குறித்து சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், புகார் அளிப்பதற்காக பார்லிமென்ட் வீதியில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வருகை தந்தார். அப்போது புகார் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். ராகுலுடன் தர்ணா போராட்டத்தில் பிரியங்கா, காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.