தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் என பலர் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று (ஜூலை 23) வெளியானது. விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே அவரது கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள், தவெகவினர் மற்றும் திரையுலகினர் ஜனநாயகன் படத்தை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர். இந்தியாவில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்ட காட்சிகளுடன், ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது.

'ஜனநாயகன்' படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 48.27 கோடி வசூலாகியுள்ளது. சர்வதேச அளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. உலகளவில் முதல் நாளிலேயே ரூ. 78.27 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் அல்லாத நேரடி டிக்கெட் விற்பனையையும் சேர்த்தால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.