தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி, நாளை (ஜூலை 23) வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, படம் வெளியாகும் நாளான ஜூலை 23-ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அலுவலக ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
"எங்களது ஊழியர்களில் பலர் இப்படத்தின் முதல் காட்சி (FDFS) பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அவர்களின் திரை உணர்வைக் கௌரவிக்கும் வகையிலும், தளபதி விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி படத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த சிறிய விடுமுறை சலுகையை வழங்கியுள்ளோம்," என அந்நிறுவன நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் வழக்கம்போல் அலுவலகப் பணிகள் தொடரும் என்றும், அனைத்து ஊழியர்களும் உரிய நேரத்தில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு சில நிறுவனங்கள் விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்திற்கும் சிங்கப்பூரில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.