இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணாவில் நினைவுநாளையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியை 6-வது முறையாக அரியணை எற்றியதில் உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழகம் மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.

இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அ.தி.மு.க.. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது, ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது. பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கட்சித் தொண்டர்களும் பங்கேற்கிறோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.