சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வலுவை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன. அதற்கான ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கும் நடவடிக்கைகள் மதுரையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிளை, பகுதி, ஒன்றியச் செயலாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு நேரடி பரிச்சயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகையிலும், கிளை, பகுதி மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான தீபாவளி விழாக்களும் நடத்தப்பட்டிருந்தது.
இதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கிளை, பகுதி, ஒன்றியச் செயலாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில், நிர்வாகிகளுக்கு வட்டி, சட்டை போன்ற உடை பொருட்களையும் கொடுக்கப்படுகிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,
மாவட்ட, ஒன்றிய, கிளை பிரதிநிதிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. கிளைச் செயலாளர்கள் ரூ.2,000, வட்டச் செயலாளர்கள் ரூ.5,000, ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்களுக்கு ரூ.10,000 அளவில் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், ஹாட்பாக்ஸ், டிபன் கேரியர்கள், பாத்திரங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். இதோடு, முதல்வரின் பொங்கல் வாழ்த்துக் கடிதமும் வழங்கப்படுகிறது. வாக்குச் சாவடிகள் வாரியாக, பெண்கள் 10 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.