புதுடில்லி: கோவை மாநகராட்சியில், அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள் 54 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் , 54 பேரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.


அதிமுக ஆட்சியில், எஸ்பி வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது ,2021ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. 654 பேர் விண்ணப்பித்த நிலையில் 440 பேர் நேர்முக தேர்வு மற்றும் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். 54 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்ட சிலர் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர்கள் சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், செந்தில்குமார் அமர்வு' தேர்வாணையம் அல்லது தேர்வு நடைமுறைகள் பின்பற்றாமல் 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புறவாசல் வழியாக நடந்த இந்த நியமனம் ரத்து செய்யப்படுகிறது. உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு '' 2021 அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் சட்டவிரோதமானது'' எனக்கூறி சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்ததுடன், 54 பேரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.