அட்லாண்டா: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், அர்ஜென்டினா அணி வீரர்கள், அடர் நீல நிற 'ஜெர்சியில்' களமிறங்க திட்டமிட்டு உள்ளனர்.
உலக கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து மோதலில் மறக்க முடியாத தருணங்கள் பல உள்ளன. 1986, காலிறுதி போட்டியில் அர்ஜென்டினாவின் மாரடோனா 'கடவுளின் கையால்' கோல் அடிக்க, இங்கிலாந்து அணி வெளியேறியது. 1998, 'ரவுண்டு-16' போட்டியில் அர்ஜென்டினா வீரர் தியாகோ சிமியோனை 'பவுல்' செய்த இங்கிலாந்தின் டேவிட் பெக்காம், 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். இந்த இரண்டு வெற்றிகளின் போதும், அர்ஜென்டினா அணி, தங்களது பாரம்பரிய நீலம், வெள்ளை கோடுகள் கொண்ட 'ஜெர்சிக்குப்' பதில், அடர் நீலம் அல்லது கருநீல 'ஜெர்சி' அணிந்திருந்தது. நடப்பு உலக கோப்பை தொடரில், பாரம்பரிய நீலம், வெள்ளை கோடுகள் கொண்ட 'ஜெர்சி' அணிந்து அர்ஜென்டினா அணியினர் இதுவரை விளையாடினர். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அடர் நீல நிற 'ஜெர்சி' அணிய அனுமதி தருமாறு, அர்ஜென்டினா அணி தரப்பில் இருந்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் ('பிபா') வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதுவரை அனுமதி தரப்படவில்லை என்றாலும், இன்று முடிவு தெரியவரும்.