20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. குரூப் 2 பிரிவில் போட்டியை நடத்தும் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது. 2-வதாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழையும். நியூசிலாந்து 3 புள்ளியுடனும், பாகிஸ்தான் ஒரு புள்ளியுடனும் உள்ளன.

கொழும்பில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி நிகழ்ந்தால் பாகிஸ்தான் - இலங்கை இடையே நாளை 28-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தான்-இலங்கை இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் 3 புள்ளியுடன் சமநிலை பெறும். ரன் ரேட் ஒரு அணி தகுதி பெறும். தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானை விட நியூசிலாந்து ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹாரிக் புரூக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் 30 போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 17-ல், நியூசிலாந்து 10-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லை.