திருவனந்தபுரம்: கேரளத்தில், அம்மாநில த.வெ.க., தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் த.வெ.க., அரசுக்கு காங்., ஆதரவளித்து, அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள த.வெ.க., கேரளாவிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கேரள மாநில பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்து அக்கட்சியில் இருந்து விலகிய நடிகர் தேவன் த.வெ.க மாநில தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், வரும் செப்.,8ல், சென்னையில் த.வெ.க., தலைவரான முதல்வர் விஜயை சந்தித்து, முறைப்படி த.வெ.க.,வில் இணைகிறார். அப்போது, கேரள த.வெ.க., தலைவராக தேவனை நியமிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதன் வாயிலாக, காங்., வலுவாக இருக்கும் கேரளாவில் கால் பதித்து, அக்கட்சியின் செல்வாக்கை அசைக்க த.வெ.க., முயற்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.