திண்டுக்கல், செப்.9: திண்டுக்கல் நகரில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு உட்பட்ட சாலைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் 15 ரேஷன் கடைகளில் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய பறக்கும் படையினர் ஒரே நேரத்தில் நேரடி ஆய்வு செய்தனர்.
கோவிந்தராஜ் நகர் ரேஷன் கடையில் விற்பனையாளர் பாய்ண்ட் ஆப் சேல் மெஷினில் உள்ள கையிருப்பு விவரங்களை விட கடையில் கையிருப்பு பொருட்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி, வயது 59, ரேஷன் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
பாலகிருஷ்ணாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் சரண்யா, வயது 37, நாயக்கர் புதுத்தெரு ரேஷன் கடை விற்பனையாளர் டி.வை.ஆனந்த், வயது 43, கருணாநிதி நகர் ரேஷன் கடை விற்பனையாளர் மெகராஜ், வயது 50, ஆகியோரும் ரேஷன் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கூட்டுறவு சார்பதிவாளர் அதிகாரிகளின் அறிக்கையின் படி, ரேஷன் விற்பனையாளர்களால் நாள் விற்று வருக்கும ரூ.49 ஆயிரத்து 575 அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு ரேஷன் கடைகளிலும் ரூ.36 ஆயிரத்து 400 கையிருப்பு குறைந்ததால் நால்வரையும் ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி உத்தரவிட்டார்.
விற்பனையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மெகராஜ் ஆகியோரிடம் ‘புட் ஷெல்’ குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி வெகுவாக பாராட்டினார்.
மேலும், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய, ஸ்ரீ ராகவ் பாலாஜி தொடர்ந்து அதிரடி ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
“ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை” என்ற நிலைப்பாட்டில் கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.