திண்டுக்கல், செப். 6-

கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வியையும் உணவையும் ஒரு சேர வழங்கும் வகையில் 1955ல் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் 1982ல் கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளுக்கும் சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

சத்துணவு உதவியாளர்கள், அமைப்பாளர்கள், சமையலர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு 2017, 2020ல் வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1518 மையங்களில் 975 சத்துணவு அமைப்பாளர்கள், 219 சமையலர்கள், 770 உதவியாளர்கள் என 1964 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதன் காரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் நான்கு மையங்களிலும், சமையலர் மூன்று மையங்களிலும் பணியாற்றும் சூழல் நிலவுகிறது. இந்த பணிச்சுமையால் மாணவர்களுக்கு தரமான உணவை சமைத்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னர் விறகு அடுப்பு மூலம் சத்துணவு மையங்களில் உணவு தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது காஸ் அடுப்பு மூலமே உணவு சமைக்கப்படுகிறது. ஆனால் காஸ் சிலிண்டர் விலை, காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அரசு வழங்கும் அரிசி, பருப்பு தவிர்த்து இதர மளிகைப் பொருட்களை பணியாளர்களே வாங்க வேண்டியுள்ளது. இவற்றின் விலையேற்றமும் கவலை அடைய செய்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இரு மடங்கு செலவாவதால் பணியாளர்கள் திணறுகின்றனர். தினசரி உணவு சமைத்து வழங்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் உணவு செலவினத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சத்துணவு திட்டத்தில் அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெசி கூறியதாவது:

சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் காலி பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளது. நத்தம் தொகுதியில் மட்டும் 120 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பாளரும் இரண்டு முதல் நான்கு பள்ளிகள் வரை கவனிப்பதால் கூடுதல் பணிச்சுமையில் உள்ளனர்.

சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இத்திட்டம் இருந்த போதும் ஊழியர்கள் நியமனம், இடமாற்றம், கண்காணிப்பு, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளே செய்கின்றனர்.

பெரும்பாலும் சத்துணவுத் துறையில் பெண் ஊழியர்களே அதிகமாக உள்ளதால் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஒரே துறையின் கீழ் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது என்றார்.