கன்னியாகுமரி, செப். 16-

குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றில் 12,500 லிட்டர் ஆவின் டிலைட் பால் (ஊதா நிறம் பாக்கெட்), 5,500 லிட்டர் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (பிங்க் கலர் பாக்கெட்), 7500 லிட்டர் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு கலர் பாக்கெட்) விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் தற்போது தட்டுப்பாடு காரணமாக இதன் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. நாள் தோறும் 17 ஆயிரம் லிட்டர் பால் கிடைப்பதே மிகவும் கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தியும், விவசாயிகள் தனியாருக்கு தான் அதிகம் சப்ளை செய்கிறார்கள். இதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது.

பால் பெருக்கத்தை ஏற்படுத்த ஆவின் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தனியார்கள், விவசாயிகளிடம் இருந்து அதிகமாக கொள்முதல் செய்து செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தட்டுப்பாடு காரணமாக முக்கிய ஆவின் பாலகங்கள் குறைந்த நேரமே இயங்குகின்றன. இரவு 9 மணிக்கு பிறகும் பால் சப்ளை இருந்த பாலகங்களில், இரவு 7 மணிக்கே பால் விற்பனை முடிந்து விடுகிறது.

நேற்று முன் தினம் (ஞாயிறு) முகூர்த்த நாட்கள், நாகராஜா கோயிலில் ஆவணி கடைசி ஞாயிறு என இருந்ததால் பாலின் தேவை அதிகரித்தது. இதனால் வடசேரி, கோட்டார் உள்ளிட்ட இடங்களில், பால் போதிய அளவு இல்லாமல் ஆவின் பாலகங்கள் மூடப்பட்டன. தட்டுப்பாடு பிரச்னையை, சமாளிக்க எப்.சி.எம். பால் (Full Cream Milk) வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எப்.சி.எம். பால் என்பது, அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால் ஆகும். இதை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள். மேலும் டீ கடைகள், ஓட்டல்களில் அதிகம் விரும்பி வாங்கி வந்தனர். இது நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆவின் டிலைட் பாலுக்கு (ஊதா நிறம்) மாறினர். டிலைட் பால் என்பது 3.5 சதவீத கொழுப்பு சத்தும், 8.5 சதவீத இதர சத்துக்களும் உள்ள பால் ஆகும். தற்போது டிலைட் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலையை சமாளிக்க பால் வரத்து அதிகரிக்கும் வகையில் ஆவின் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.