அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனிடையே, டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள டிரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியதால் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், டிரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும், 80 ஆண்டுகால நேட்டோ பாதுகாப்பு இணைப்புகளை அழித்துவிடும். இவ்விவகாரத்தில் ஐரோப்பாவின் முழு ஆதரவும் தங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.