ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தைப் பிடித்தது. குத்துச் சண்டை போட்டிகளில் இந்தியா சாதனை படைத்தது. குல்வீர் சிங் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளி பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நமது அணியின் செயல்பாட்டை கண்டு பெருமிதம் கொள்கிறேன். 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தப் போட்டிகள் முழுவதும் நமது திறமையான விளையாட்டு வீரர்கள் அபாரமான திறமை, உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் கடின உழைப்பு நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். இந்திய அணி முழுவதற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவர்கள் தொடர்ந்து தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.