விருதுநகர் பாத்திமாநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கழிவுநீரேற்று நிலையம், கழிவுநீரை முறையாக கையாள வேண்டிய இடமாக இல்லாமல், விதிமுறைகளை மீறி கழிவுகளை கொட்டும் இடமாக மாறி வருகிறதா? என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை உரிய முறையில் நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நகராட்சியில் உரிமம் பெற்ற தனியார் கழிவுநீர் சேகரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், சில தனியார் கழிவுநீர் வாகனங்கள் உரிய சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லாமல், பாத்திமாநகர் கழிவுநீரேற்று நிலையத்தின் கிணறுகளில் கழிவுகளை கொட்டிச் செல்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீரேற்று நிலையமா... கழிவுக் கிடங்கா?
இந்த புகார் உண்மையா என்பதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் அல்லது கண்காணிப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் தனியார் கழிவுநீர் வாகனங்கள் அங்கு வந்து கழிவுகளை கொட்டுகின்றனவா? அந்த வாகனங்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை? அவற்றுக்கு நகராட்சி உரிமம் உள்ளதா? என்பது குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மேலும், அங்கு தற்போது 50 குதிரைத்திறன் கொண்ட ஒரு மின் மோட்டார் மட்டுமே செயல்படுவதாகவும், 30 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாட்டில் சிரமம் இருப்பதாக கூறப்படும் நிலையில், வெளிப்புறத்திலிருந்து கூடுதலாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டால், கிணறுகள் விரைவில் நிரம்புவதுடன் மேன்ஹோல்களில் கழிவுநீர் தேங்கும் அபாயமும் ஏற்படலாம்.
அவ்வாறு கழிவுநீர் வெளியேறினால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகும் நிலை ஏற்படுமா? பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா?
தனியார் கழிவுநீர் வாகனங்கள் வந்து செல்கின்றன என்ற புகார் எழுந்துள்ள நிலையில், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறதா? வாகனங்களின் பதிவு எண்கள் பதிவு செய்யப்படுகிறதா? கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்களா? என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது.
நகராட்சியில் உரிமம் பெற்ற நிறுவனங்களின் வாகனங்கள் மட்டுமே விதிமுறைகளின்படி கழிவுகளை கையாளுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கழிவுநீரேற்று நிலையம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய கட்டமைப்பாக இருக்கும் நிலையில், அது கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டும் இடமாக மாறினால் நிலைமை விபரீதமாகும்.
எனவே, பாத்திமாநகர் கழிவுநீரேற்று நிலையத்தில் தனியார் வாகனங்கள் கழிவுகளை கொட்டுகின்றனவா என்பது குறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். உண்மை எனத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விதிமீறல்கள் நடைபெற்றிருந்தால் அவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததா? அல்லது கண்காணிப்பில் அலட்சியம் ஏற்பட்டதா? என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டிய நிலையம்... கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவிடாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.