சென்னை: கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் காட்டி வரும் கர்நாடகா, ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவும் மறுத்து வருகிறது. நீர் பங்கீட்டு பிரச்னையில் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடர்ந்தே, தண்ணீரைப் பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியத்திடம் இருந்து தமிழகம் பெற்றது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் ஆக.,2ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. மேலும், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாகவே இருப்பதால், தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா முதல்வர் சிவகுமார் நேற்று கூறினார்.

இந்த நிலையில், இன்று மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சிவகுமார், 'கர்நாடகா அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தண்ணீரை நாம் கட்டுப்படுத்த நினைத்தால், அது நமக்கு ஆபத்தாகி விடும். கன்னட அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,' என்றார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்போவதாக கர்நாடகா முதல்வர் சூசகமாக கூறிய நிலையில், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.