ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த முகம் இது. அந்தப் படத்தில் நாசரின் மனைவியாக வரும் இவர், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர, அன்பே வா சீரியலில் நடித்ததன் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல பரிச்சயமானார். அவர் பெயர் விநயா பிரசாத். கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் விநயா பிரசாத். பி.காம் பட்டதாரியான இவர், கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றவர்.
மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த படமான மணிசித்திரத்தாழ் படத்தில் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விநயா பிரசாத் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். விநயா பிரசாத் எடிட்டர் பிரசாத் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விநயா பிரசாத்திற்கு 28 வயதாக இருக்கும் போது அவரது கணவர் காலமானார். கணவர் இறந்த நான்கே நாட்களில் அவர் மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பினார். அந்தச் சூழலில் அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் மீண்டு வர முடியாது என்பதாலும், தனது மகளின் எதிர்காலத்திற்காகவும் இந்தத் தைரியமான முடிவை எடுத்தார். இது பலருக்கும் வியப்பையும் உத்வேகத்தையும் அளித்தது. தனது மகளுக்கு 14 வயதாகும்போது, விநயா பிரசாத் ஜோதி பிரகாஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.