தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் விடுதலைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சு.க. முருகவேல் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தை திரித்துப் பொருள் கொண்டு கைது செய்திருப்பது அவசியமற்ற நடவடிக்கை என்றும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகும் அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யவில்லை என்றும், அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்ததாகவும் முருகவேல் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் நடிகர் விஜய் குறித்து பேசியபோது அமைதியாக இருந்த விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மட்டும் கைது நடவடிக்கை எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காகவும், காவிரி–மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை மக்கள் விடுதலைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், அவரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சு.க. முருகவேல் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.