ஓசூர்: 'ஓசூர் - பொம்மசந்திரா இடையேயான இரு மாநில மெட்ரோ ரயில் சேவை சாத்தியமில்லை' என, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் மீண்டும் அறிக்கை அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது. அங்கிருந்து, தமிழகத்தின் ஓசூர் வரை, 11 கி.மீ., துாரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில், ஓசூர் - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண் டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கியுள்ள தகவல் வெளியாகிஉள்ளது.

சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும். மேலும், நிர்வாக அனுமதி, நிதி, வருவாய் பங்கீடு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர்மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றை வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.