சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக முன்னேறி வரும் ஆசிய நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர்களில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிய போதிலும், இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இந்த நிலையில், வருகிற ஜூன் மாத வாக்கில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகள் மோதும் ஒற்றை டெஸ்ட் போட்டி ஜூன் 6-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி வர நடைபெறுகிறது. இந்தப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 17-ம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 20-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பகல், இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.