உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ம் தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித புனித நீராடல் தொடங்கியது. இந்த மகாமேளா பிப்ரவரி 15-ம் தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதே போன்று கங்கை நதியிலும் புனித நீராடினர். இதில், இன்று 15-ம் தேதி (மகர சங்கராந்தி), வரும் 18-ம் தேதி (மவுனி அமாவாசை), வரும் 23-ம் தேதி (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1-ல் (மகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15-ம் தேதி (மகா சிவராத்திரி) ஆகியவை புனித நீராடல் செய்வதற்கான முக்கிய நாட்கள் ஆகும்.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகர சங்கராந்தி கொண்டாட்டங்கள் நேற்று காலை தொடங்கின. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் புனித நீராடினர். இதில், காலை 6 மணி நிலவரப்படி, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கையிலும், திரிவேணி சங்கமத்திலும் புனித நீராடினர்.

இதனையொட்டி, உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் மொத்தம் 12,100 அடி நீளத்திற்கு குளியல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சீரான வாகன போக்குவரத்துக்காகவும் இந்த ஆண்டு 42 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் மகர சங்கராந்தி கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது.